×

மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்துகள் விற்பனையை தடைசெய்ய வேண்டும்!: மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தல்

டெல்லி: மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்துகள் விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தியுள்ளார். இ-பார்மஸி மூலமாக ஆன்லைனில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதை நெறிமுறைப்படுத்த தற்போது வழிவகை இல்லாததால், இது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினார்.

சிறப்பு கவன ஈர்ப்பின் மூலம் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது:

இ-பார்மஸி மற்றும் பிரத்யேக இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்படும்போது, அவற்றை சரிபார்க்கவோ, அங்கீகரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால், இந்த வகையிலான விற்பனைகள் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. சட்டபூர்வ உரிமம் எதுவுமின்றி, தரமற்ற மருந்துகளைக் கொண்டு நடக்கும் ஆபத்தான இத்தகைய விற்பனை மக்களின் உயிரோடு விளையாடி பெரும் துன்பத்திற்கு வழிவகுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை 2018 அளித்த தீர்ப்பின் மூலம் டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்தது. அதன்பிறகு சென்னை, பாட்னா, மும்பை போன்ற உயர்நீதிமன்றங்களும் ஆன்லைன் மருந்து விற்பனையை செய்யும் இ-பார்மஸிக்களை ஒழுங்கு படுத்த விதிமுறைகளை வகுக்கும்படி ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டது.

இந்தத் தீர்ப்புகளுக்குப் பிறகும் ஒன்றிய அரசு அமைதியாக இருந்ததால், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுக்க உள்ள 12 லட்சம் மருந்துக்கடைகளை மூடி போராட்டம் நடத்தப் போவதாக அவர்களின் சங்கம் அறிவித்த பிறகு ஒன்றிய அரசு சுமார் இருபது மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனாலும் கூட ஆன்லைன் மருந்து விற்பனை இன்றுவரை எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டுதான் உள்ளது. அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களின் குறிப்புச் சீட்டு இல்லாமல், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஆன்லைன் மருந்தகங்கள் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதால் அது சரியான அளவில் இல்லாமல், தரமற்ற மருந்துகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவற்றை உட்கொள்ளும் மக்களை அது உடல் ரீதியிலான நீண்டகாலத் துன்பத்திற்கு ஆளாக்கிவிடும். ஆன்லைனில் விற்பனையாகும் மற்ற பொருட்களைப் போல மருந்துகளைக் கருத முடியாது.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இ-பார்மஸிக்களை ஒழுங்குபடுத்த சரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும். அதுவரை இதிலுள்ள ஆபத்தைப் புரிந்துகொண்டு, ஆன்லைன் மூலம் சில்லறை மற்றும் மொத்தமாக மருந்துகளை விற்பனை செய்யும் இணையதளங்கள் மற்றும் இ-பார்மஸிக்களை அடையாளம் கண்டு அவற்றைத் தடை செய்வதுடன் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். அதேபோல ஆன்லைனில் மருந்துகள் வாங்குவதையும் அரசு தடை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.

The post மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்துகள் விற்பனையை தடைசெய்ய வேண்டும்!: மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi NVN Somu ,Rajya Sabha ,Delhi ,DMK ,Kanimozhi N.V.N.Somu ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற...